நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய (தீய) செயல்களை (நல்ல செயல்களாக) அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
அந்த சமயத்தை நினைவு கூர்வீராக! மூஸா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை; அல்லது, (அதிலிருந்து) எடுக்கப்பட்ட நெருப்புக் கொள்ளியை நீங்கள் குளிர் காய்வதற்காக உங்களிடம் கொண்டு வருகிறேன்.”
ஆக, அவர் அதனிடம் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டு “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவனும் இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் புனிதமானவர்கள் என்று நற்செய்தி கூறப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (எல்லா குறைகளை விட்டு) மிக்க பரிசுத்தமானவன்.”
“உமது தடியைப் போடுவீராக! ஆக, அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டு திரும்பி (ஓடி)னார். அவர் திரும்பி பார்க்கவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் இறைத்தூதர்கள் பயப்பட மாட்டார்கள்.”
“(எனினும் தூதர்களில்) யார் தவறிழைத்தாரோ அவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தாரோ அவரை நான் மன்னித்து விடுவேன். ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவேன்.”
“இன்னும், உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னுகின்ற வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (அகிலங்களின் இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”