ஆக, நீங்கள் (ஓர் இடத்தில் நின்று தொழும்போது எதிரிகள் தாக்குவார்கள் என்று) பயந்தால், அப்போது நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்(து அருள் புரிந்)தது போன்று (தொழுகையிலும் அதற்கு வெளியிலும்) அல்லாஹ்வை (புகழ்ந்து நன்றியுடன்) நினைவு கூருங்கள்.
உங்களில் எவர்கள் மரணிக்கிறார்களோ, இன்னும் மனைவிகளை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்கும் (அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான) பொருள்களை (-செலவுகளை) வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆக, அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
(நபியே!) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்’ எனக் கூறினான். பிறகு, அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பல மடங்குகளாக பெருக்கித் தருவான். அல்லாஹ் (தான் நாடியவருக்கு) சுருக்கியும் கொடுக்கிறான், (தான் நாடியவருக்கு) விசாலமாகவும் கொடுக்கிறான். அவனிடமே (நீங்கள் எல்லோரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.