111. (அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்.
112. இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக.
113. மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்).
114. ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.
115. (நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்.
116. இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.
117. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்.
118. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்.