1. (நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்குபவன் ஆவான்.
2. உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.)
3. ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்.
4. (விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
5. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப் படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கிறோம். (அதற்கு) மாறுசெய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்.