3. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.
4. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
5. மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.