189. (நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப்பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் ஹஜ்ஜூடைய காலங்களையும் அறிவிக்கக்கூடியவை.'' மேலும், (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.